குருநானக்கும் சீடர்களும்,
ஓர் அரிய தஞ்சாவூர் பாணி ஓவியம்
தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களினூடாக மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது.
வரலாறு
பல நூற்றாண்டுகளாக இக் கலைப் பாணியைக் கால ஓட்டத்துக்குத் தக்கவாறு வளர்த்து வந்தவர்கள் தஞ்சை நாயக்கர் காலத்தில் தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள் (moochys) எனப்படும் ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவார். இவர்களை அக்காலத்து அரசர்கள் ஆதரித்து வந்தனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி கலைகளில் பெரும் பற்றுக் கொண்டவர். ஓவியர்களுக்குப் போதிய அளவு வாய்ப்புக்களை வழங்கி அவர்களை ஆதரித்து வந்தார். இவர் காலத்தில் தஞ்சாவூர் நிர்வாகம் முற்றாகவே ஆங்கிலேயர் வசம் சென்றிருந்தது. எனினும், சரபோஜி பெயரளவில் மன்னராக இருந்தார். இவரது அரண்மனையிலிருந்த ஓவியங்கள் மூலமாக அக்காலத்திய தஞ்சாவூர்ப் பாணி பற்றி அறிந்த ஆங்கிலேயர் பலர் அவற்றை வரைந்தவர்களை அணுகி ஓவியங்களை வரைந்து பெற்றுக்கொண்டனர். இக்காலத்திலேயே ஆங்கிலேயரின் விருப்பத்திற்கு ஏற்ப, மேற்கத்திய நுட்பங்களையும் கலந்து ஓவியங்கள் வரையப்பட்டன. நுட்பங்களில் மட்டுமன்றி, உள்ளடக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பெரும்பாலும் கடவுளரையும், அரசர்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையும் பழக்கம் மாறி, சாதாரண மக்களின் வாழ்க்கையும் ஓவியங்களிலே இடம் பெறத்தொடங்கின.
No comments:
Post a Comment